டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka நிதியத்துக்கு, டிசம்பர் 2 வரை 19,000இற்கும் அதிகமான வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் பங்களிப்புச் செய்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் நிவாரணம் வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள்
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் பலர் சந்தர்ப்பம் கோரியதையடுத்து, நிதி அமைச்சு மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.
வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் முறையான வங்கிச் சேவைகள் மூலம் பணம் அனுப்பச் சிரமம் ஏற்பட்டால், அவர்கள் அருகில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் நிதியை அனுப்பலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிதியாகவோ அல்லது அத்தியாவசியப் பொருட்களாகவோ நீங்கள் வழங்கும் உதவிகள், உங்கள் குடும்ப உறுப்பினர், அண்டை வீட்டார்கள் அல்லது தேவைப்படும் எந்தவொரு இலங்கை குடிமகனுக்கும் சென்றடையும் என்றும், இந்தப் பேரிடர் தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அனைவரின் ஆதரவும் அத்தியாவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.








































